bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Mark 14
Mark 14
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 15 →
1
பஸ்கா பண்டிகையும், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைது செய்து, அவரைக் கொலை செய்வதற்காக தந்திரமான ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
2
ஆனால், “பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக் கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
3
பெத்தானியாவிலே முன்பு தொழுநோயாளியாயிருந்த சீமோன் என்பவனுடைய வீட்டில் இயேசு உணவுப் பந்தியில் அமர்ந்திருக்கும்போது, ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த நளதம் என்னும் வாசனைத் தைலம் நிறைந்த ஒரு வெள்ளைக் கல் குடுவையைக் கொண்டுவந்து, அதை உடைத்து அந்த வாசனைத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
4
அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
5
அத்துடன், “இதை முந்நூறு தினாரி பணத்துக்கும் கூடுதலாக விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள்.
6
அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விட்டுவிடுங்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தச் செயலை செய்தாள்.
7
ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்; எனவே, விரும்புகிற போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நானோ எப்போதும் உங்களுடன் இருக்கப் போவதில்லை.
8
அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம் பண்ணுவதற்கென முன்னதாகத் தயார் செய்யும்படியே அவள் இந்த வாசனைத் தைலத்தை என்னுடைய உடலின்மேல் ஊற்றினாள்.
9
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார்.
10
அப்போது பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக தலைமை மதகுருக்களிடம் சென்றான்.
11
அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து அவனுக்குப் பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.
12
புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவை உண்பதற்கு நாங்கள் எங்கே போய் அதற்கான ஆயத்தத்தைச் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
13
அப்போது அவர் தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள்ளே போங்கள். அப்போது தண்ணீர்க் குடத்தைச் சுமந்து வருகின்ற ஒரு மனிதனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போய்,
14
அவன் பிரவேசிக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘நான் எனது சீடர்களுடன் பஸ்கா உணவை உண்ண எனது விருந்தினர் அறை எங்கே இருக்கின்றது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்கா உணவை உண்ண வேண்டும்’ என்று போதகர் கேட்கின்றார் என அவனுக்குச் சொல்லுங்கள்.
15
தேவையான அனைத்து தளபாடங்களுடன் கூடிய ஒரு பெரிய மேல்வீட்டு அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பினார்.
16
சீடர்கள் புறப்பட்டு பட்டணத்துக்குள் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருக்கக் கண்டு பஸ்கா உணவை ஆயத்தம் செய்தார்கள்.
17
மாலை வேளையானபோது, இயேசு பன்னிருவரோடும் அங்கு வந்து சேர்ந்தார்.
18
அவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான். என்னோடு சாப்பிடுகின்றவர்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.
19
அவர்கள் துக்கமடைந்து, ஒவ்வொருவராக, “அது நானா?” என்று கேட்டார்கள்.
20
“என்னுடனே ஒரே பாத்திரத்தில் தொட்டு உண்ணுகின்ற பன்னிருவரில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என அவர் பதிலளித்தார்.
21
“தம்மைக் குறித்து எழுதியிருக்கின்றபடியே மனுமகன் போய் விடுவார். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்ற மனிதனுக்கோ ஐயோ பேரழிவு! அவன் பிறக்காமலே இருந்திருந்தால், அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
22
அவர்கள் உணவு உட்கொண்டிருக்கையில் இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், இது என்னுடைய உடல்.”
23
பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும் அந்தக் கிண்ணத்திலிருந்து அருந்தினார்கள்.
24
அவர் அவர்களைப் பார்த்து, “இது புதிய உடன்படிக்கையின் என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது அநேகருக்காக சிந்தப்படுகிறது.
25
உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நான் இறைவனுடைய அரசில் திராட்சைப் பழரசத்தைப் புதிதானதாக அருந்தும் அந்த நாள் வரைக்கும், இனிமேல் இதை நான் அருந்த மாட்டேன்” என்றார்.
26
அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு ஒலிவமலைக்குப் போனார்கள்.
27
இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன், அப்போது செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்’ என்று எழுதியிருக்கின்றபடியே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப் போவீர்கள்.
28
ஆயினும் நான் உயிரோடு எழுந்த பின் உங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
29
அதற்கு பேதுரு, “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் போக மாட்டேன்” என்றான்.
30
அப்போது இயேசு, “உண்மையாகவே நான் உனக்கு சொல்கின்றேன், இன்று இரவே சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னதாகவே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.
31
ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் உயிர் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்ற அனைவரும் அவ்விதமாகவே சொன்னார்கள்.
32
அவர்கள் கெத்செமனே என்று சொல்லப்பட்ட ஒரு இடத்துக்குப் போனார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப் போகின்றேன், அதுவரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்” என்றார்.
33
அவர் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் அழைத்துக்கொண்டு போய் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார்.
34
அத்துடன் அவர், “உயிர் நீங்கும் அளவுக்கு என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள்” என்றார்.
35
அவர் சற்றுத் தூரமாய்ப் போய் தரையில் விழுந்து மன்றாடி, முடியுமானால் அந்தவேளை தம்மைவிட்டுக் கடந்து போகும்படி வேண்டிக் கொண்டார்.
36
அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்து விடும். ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்றார்.
37
பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரையாய் இருப்பதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கின்றாயோ? உன்னால் ஒரு மணி நேரம் விழித்திருக்க முடியவில்லையா?
38
நீங்கள் விழித்திருந்து மன்றாடுங்கள், அப்போது சோதனைக்குள் விழ மாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
39
அவர் திரும்பவும் போய் அதேவிதமாகவே மன்றாடினார்.
40
அவர் திரும்பி வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரை செய்கின்றதைக் கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தபடியால் அவருக்கு என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
41
அவர் மூன்றாம் தடவையும் திரும்பி வந்து சீடர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? போதும்! வேளை வந்துவிட்டது. இதோ, மனுமகன் பாவிகளின் கைகளில் காட்டிக் கொடுக்கப்படப் போகின்றார்.
42
எழுந்திருங்கள், நாம் போவோம்! இதோ என்னைக் காட்டிக் கொடுப்பவன் வந்துவிட்டான்!” என்றார்.
43
அவர் பேசிக் கொண்டிருக்கையில், பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் தலைமை மதகுருக்களாலும், நீதிச்சட்ட ஆசிரியர்களாலும், சமூகத் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர்.
44
அவரைக் காட்டிக் கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாக சொல்லியிருந்தான். “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே அந்த ஆள்; அவரைக் கைது செய்து காவலுடன் அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான்.
45
யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.
46
அப்போது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள்.
47
அவ்வேளையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை உருவி தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது காதை வெட்டினான்.
48
இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா?
49
ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு உங்களோடுதானே இருந்தேன். அப்போது நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. ஏனெனில், வேதவசனங்கள் நிறைவேற வேண்டியிருக்கிறதே” என்றார்.
50
அப்போது எல்லோரும் அவரை தனியேவிட்டு ஓடிப் போனார்கள்.
51
அப்போது இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன் விலையுயர்ந்த மெல்லிய மேலாடையை அணிந்து கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது,
52
அவன் தன்னுடைய மேலாடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான்.
53
அவர்கள் இயேசுவை பிரதம மதகுருவிடம் கொண்டுபோனார்கள். அங்கே எல்லா தலைமை மதகுருக்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள்.
54
பேதுரு சற்றுத் தொலைவில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், தலைமை மதகுருவினுடைய முற்றத்திற்குள் சென்றான். அங்கே அவன் காவலருடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
55
தலைமை மதகுருக்களும், நியாயசபையில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை கொடுப்பதற்காக அவருக்கு எதிரான சாட்சியத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித சாட்சியமும் கிடைக்கவில்லை.
56
பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய் இருந்தன.
57
பின்பு சிலர் எழுந்து நின்று அவருக்கு எதிராக இவ்விதமாகப் பொய்ச் சாட்சி கொடுத்தார்கள்:
58
“ ‘மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நான் இடித்துவிட்டு, பின்பு மூன்று நாட்களுக்குள் கைகளினால் கட்டப்படாத வேறொரு ஆலயத்தைக் கட்டுவேன்’ என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.
59
அப்படியிருந்தும் அவர்களுடைய சாட்சியம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய் இருந்தது.
60
அப்போது தலைமை மதகுரு அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பார்த்து, “நீ பதில் சொல்ல மாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கின்ற சாட்சியம் என்ன?” என்று கேட்டான்.
61
ஆனால் இயேசுவோ, பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார். திரும்பவும் தலைமை மதகுரு அவரைப் பார்த்து, “நீ துதிக்கப்படுபவரின் மகனான மேசியாவா?” என்று கேட்டான்.
62
அதற்கு இயேசு, “ஆம், நானே அவர், மனுமகன் வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
63
அப்போது தலைமை மதகுரு தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையோ?
64
இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். அவர்கள் எல்லோரும் அவரை மரணதண்டனைக்குரியவர் என தீர்ப்புக் கூறினார்கள்.
65
அப்போது சிலர் அவர்மீது துப்பத் தொடங்கி, அவருடைய கண்களைக் கட்டி, தங்களுடைய கைகளால் அவரைக் குத்தி, “உன்னை அடித்தது யார் என்று இறைவாக்காகச் சொல்” என்று சொன்னார்கள். பின்பு காவலாளிகளும் அவரைக் கொண்டுபோய் அடித்தார்கள்.
66
அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்போது தலைமை மதகுருவின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள்.
67
அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, அவனை உற்றுப் பார்த்து, “நீயும் நாசரேத்து ஊரானாகிய, அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள்.
68
ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கின்றாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு முற்றத்தின் வாசல் பக்கமாகச் சென்றான். அப்போது சேவல் கூவிற்று.
69
அந்த வேலைக்காரி அவனை அங்கேயும் கண்டு, அங்கே சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இவனும் அவர்களில் ஒருவன்” என்றாள்.
70
அவன் திரும்பவும் அதை மறுதலித்தான். சிறிது நேரத்தின் பின் அங்கே நின்றவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். ஏனென்றால் நீ ஒரு கலிலேயன்” என்றார்கள்.
71
அப்போது அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்றும், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன் மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
72
உடனே சேவல் இரண்டாம் முறை கூவிற்று. அப்போது, “சேவல் இரு முறை கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவு கூர்ந்தான். அதனால் அவன் மனங்கசந்து அழுதான்.
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16