bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Mark 6
Mark 6
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 7 →
1
இயேசு அங்கிருந்து புறப்பட்டு தமது சொந்த பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் போனார்கள்.
2
ஓய்வுநாளிலே அவர் அவர்களுக்கு ஜெபஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தவர்களாய், “இந்தக் காரியங்களை இவன் எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவனால் எப்படி இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய முடிகின்றது?
3
இவன் மரியாளின் மகனான தச்சன் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கின்றார்களே” என்று சொல்லி அவரை ஏற்றுக்கொள்ளாமல் எரிச்சலும் கோபமும் அடைந்தார்கள்.
4
இயேசு அவர்களிடம், “ஒரு இறைவாக்கினருக்கு அவரது சொந்த ஊரிலும், அவரது உறவினர் மத்தியிலும், அவரது குடும்பத்தவருக்குள்ளும் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மதிப்புண்டு” என்றார்.
5
நோயுற்ற ஒரு சிலர் மேல் தமது கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர அங்கு அவரால் வேறு அற்புதங்களை செய்ய முடியவில்லை.
6
அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சென்று போதித்தார்.
7
அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பி அவர்களுக்கு தீய ஆவிகளுக்கு மேலாக அதிகாரத்தையும் கொடுத்தார்.
8
அவர் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு கைத்தடியைத் தவிர பயணத்திற்கென்று எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம். உணவோ, பயணப்பையோ, மடிப்பையில் பணமோ கொண்டுபோக வேண்டாம்.
9
காலணிகளை அணிந்துகொள்ளுங்கள், ஆனால் மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.”
10
மேலும் அவர் அவர்களிடம், “நீங்கள் போகும் பட்டணங்களில் ஒரு வீட்டிற்குள் போனால் அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும் வரை அங்கேயே தங்கியிருங்கள்.
11
எதாவது ஒரு இடத்திலுள்ளவர்கள் உங்களை வரவேற்காமலோ, நீங்கள் செல்வதைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அங்கிருந்து புறப்படும்போது உங்கள் கால் தூசியை அங்கே உதறிவிட்டுப் போங்கள். அது அவர்களுக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்” என்றார்.
12
அவர்கள் புறப்பட்டுப் போய் மனிதர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்தார்கள்.
13
அத்துடன் அவர்கள் அநேக பேய்களைத் துரத்தி, நோயாளிகள் பலருக்கு எண்ணெய் பூசி, அவர்களைக் குணமாக்கினார்கள்.
14
இயேசுவின் பெயர் பிரபல்யம் அடைந்திருந்தபடியால் ஏரோது அரசனும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டான். சிலரோ, “யோவான் ஸ்நானகன் திரும்பவும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான், அதனால்தான் இவனால் வல்லமையான அற்புதங்களைச் செய்ய முடிகின்றது” என்றார்கள்.
15
மற்றவர்களோ, “இவன் எலியா” என்றார்கள். இன்னும் சிலரோ, “இவன் முற்காலத்தில் இருந்த இறைவாக்கினரைப் போன்ற ஒரு இறைவாக்கினன்” என்றார்கள்.
16
ஆனால் ஏரோது இதைக் கேள்விப்பட்டபோது, “நான் சிரச்சேதம் செய்த யோவானே இறந்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறான்!” என்றான்.
17
ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டி சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு அவன் இதைச் செய்திருந்தான்.
18
யோவான் ஏரோதுவிடம், “உன் சகோதரனின் மனைவியை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு மாறானது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
19
இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு அவனைக் கொலை செய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை.
20
ஏனெனில் யோவான் நீதிமான் என்பதையும் பரிசுத்தம் உள்ளவன் என்பதையும் ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து அவனைப் பாதுகாத்து வந்தான். யோவான் பேசுவதை கேட்ட போதெல்லாம் ஏரோது மிகவும் குழப்பமடைந்தான்; இருப்பினும், யோவான் பேசுவதை விருப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
21
கடைசியாக, ஏரோதியாளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஏரோது தனது பிறந்த நாளிலே தனது உயர் அதிகாரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயாவிலுள்ள பிரமுகர்களுக்கும் ஒரு விருந்து கொடுத்தான்.
22
ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் அவனுடைய விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன்” என்றான்.
23
மேலும், “நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாய் இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்.
24
அவள் வெளியே போய் தனது தாயிடம் இதைச் சொல்லி, “நான் எதைக் கேட்க வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்றாள்.
25
உடனே அந்தச் சிறுமி வேகமாய் அரசனிடம் வந்து, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, நீர் எனக்குத் தர வேண்டும்” என்று கேட்டாள்.
26
அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆயினும், அவன் தான் கொடுத்த ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும் அதை அவளுக்கு மறுக்க விரும்பவில்லை.
27
எனவே உடனடியாக யோவானின் தலையைக் கொண்டுவரும்படி அரசன் உத்தரவிட்டு, ஒரு காவலனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானைச் சிரச்சேதம் செய்து,
28
அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்து அதை அந்தச் சிறுமிக்குக் கொடுத்தான்; அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29
யோவானின் சீடர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் வந்து அவனது உடலை எடுத்து அதை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
30
அப்போஸ்தலர்கள் இயேசுவினிடம் திரும்பி வந்து, தாங்கள் செய்தவற்றையும், போதித்தவற்றையும் அறிவித்தார்கள்.
31
அங்கே அநேகர் வருவதும் போவதுமாய் இருந்தபடியால் அவர்களுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லாதிருந்தது. எனவே அவர் அவர்களிடம், “நாம் போய் அமைதியான இடத்தில் இளைப்பாறுவோம்” என்றார்.
32
எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி ஒரு தனிமையான இடத்திற்குப் போனார்கள்.
33
அவர்கள் புறப்பட்டுப் போவதை அநேகர் கண்டு, அவர்களை யாரென்று தெரிந்து கொண்டார்கள். எனவே, எல்லாப் பட்டணங்களிலிருந்தும் வந்திருந்த அந்த மக்கள் நடையாக விரைந்தோடிச் சென்று அவர்களுக்கு முன்னால் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
34
அவர் கரை இறங்கியபோது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது அவர் அனுதாபம்கொண்டு அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதிக்கத் தொடங்கினார்.
35
இப்படியாக அதிக நேரம் கடந்துவிட்டதால் அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான ஒரு இடம், வெகு நேரமுமாகிவிட்டது.
36
ஆகவே இந்த மக்களை அனுப்பி விடும். இவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய் தங்களுக்கு உண்பதற்கு எதையாவது வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.
37
அதற்கு அவர், “நீங்களே இவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். சீடர்கள் அவரிடம், “நாங்கள் போய் இருநூறு தினாரி பணத்துக்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க முடியுமா?” என்றார்கள்.
38
அப்போது அவர், “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன என்று போய்ப் பாருங்கள்” என்றார். அவர்கள் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
39
அப்போது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார்.
40
அப்படியே அவர்கள் நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள்.
41
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி அப்பங்களைத் துண்டுகளாக்கினார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
42
அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள்.
43
சீடர்கள் மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
44
உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
45
பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தமக்கு முன்னதாக சீடர்களைப் படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு உடனே போகும்படி செய்தார்.
46
அவர் அவர்களைவிட்டுப் புறப்பட்ட பின்பு மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார்.
47
மாலை வேளையானபோது சீடர்கள் ஏறிச் சென்ற படகு நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
48
எதிர்க்காற்று வீசியதால் அவர்கள் படகைச் செலுத்தக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் கண்டார்; அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் அவர்களைக் கடந்து போகும்போது,
49
அவர் கடலின் மேல் நடப்பதை அவர்கள் கண்டபோது அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள்.
50
ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவரைக் கண்டு பயமடைந்திருந்தார்கள். உடனே அவர் அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.
51
பின்பு அவர், அவர்களுடன் அந்தப் படகில் ஏறினார், அப்போது காற்று தணிந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியந்து திகைத்தார்கள்.
52
ஏனெனில் அப்பங்களைத் துண்டுகளாக்கி அநேகருக்கு கொடுத்த அவரது வல்லமையைப் புரிந்துகொள்ளாதபடி அவர்களுடைய மனம் கடினப்பட்டு இருந்தது.
53
அவர்கள் மறுகரைக்குச் சென்று கெனேசரேத்து என்னும் இடத்திற்கு வந்து படகைக் கரை சேர்த்தார்கள்.
54
அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
55
ஆகவே அந்தப் பகுதி எங்கும் ஓடி அவர் இருப்பதாக கேள்விப்பட்ட இடங்களுக்கு நோயாளிகளை அவர்களின் படுக்கைகளோடு கொண்டுவரத் தொடங்கினார்கள்.
56
கிராமங்களிலும், பட்டணங்களிலும், நாட்டுப் புறங்களிலும் அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் இருந்த சந்தை கூடும் இடங்களில் நோயாளிகளைக் கிடத்தினார்கள். அந்த நோயாளிகள் அவருடைய உடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16